உடுமலை, ஆனைமலை, பழனி, திருமூர்த்தி மலைக்கு செல்லும் சாலைகள் சந்திக்கும் மைய இடமாக தளி பேரூராட்சி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த பகுதியில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் சென்று வரலாம். இதன் காரணமாக வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று அந்த வழியாக அவசரகால உதவிக்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெரிசல் சிக்கிக் கொண்டது.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்,
"மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியவாறு உள்ள கிராமங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு தளியே மையப்பகுதியாகும். இங்கு வந்து வாகனங்கள் பிரிந்து சென்று வருகிறது. ஆனால் தளியின் நுழைவு பகுதியில் இருந்து ஆனைமலை செல்லும் பிரதான சாலை குறுகலாக உள்ளது.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் விலகிச் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அத்துடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதன் காரணமாக அவசரகால உதவியை அளிப்பதற்காக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது.அதை தொடர்ந்து சுதாதரித்த பொதுமக்கள் போக்குவரத்தை சீரமைத்து ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு வழிவகை செய்தனர்.
இந்த சாலையை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதை அகற்ற வேண்டியதும் அதிகாரிகள் கடமையாகும். எனவே தளிப்பகுதியில் ஆனைமலை செல்லும் பிரதான சாலையில் ஏற்பட்டு வருகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்" என்றனர்.