கொரட்டூர் சிக்னல் அருகே பழுதடைந்து நின்ற பால் லாரியால் போக்குவரத்து நெரிசல்
கொரட்டூர் சிக்னல் அருகே பழுதடைந்து நின்ற பால் லாரியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ராட்சத கிரேனை வரவழைத்து, சாலையில் பழுதாகி நின்ற பால் லாரியை ‘அலேக்’காக தூக்கி சாலை ஓரமாக நிறுத்தி வைத்தனர்.;
சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து கொரட்டூர் வழியாக பாடி நோக்கி ஆவின் பால் லாரி சென்று கொண்டிருந்தது. நேற்று காலை 8 மணியளவில் கொரட்டூர் சிக்னல் அருகே செல்லும்போது லாரியின் பின் சக்கரத்தில் உள்ள ஆக்சில் உடைந்து சாலையின் நடுவில் லாரி நின்றது. மேற்கொண்டு லாரியை நகர்த்த முடியாமல் பரிதவித்த டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு மெக்கானிக்கை அழைத்து வர சென்றுவிட்டார். காலை நேரம் என்பதால் குறுகலான சாலையில் பழுதாகி நின்ற பால் லாரியால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் அரை கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்ததும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
இதையடுத்து மாற்றுப்பாதையில ராட்சத கிரேனை வரவழைத்து, சாலையில் பழுதாகி நின்ற பால் லாரியை 'அலேக்'காக தூக்கி சாலை ஓரமாக நிறுத்தி வைத்தனர். லாரி டிரைவர் இல்லாத நிலையில் தங்கள் சொந்த செலவில் கிரேனை வரவழைத்ததுடன், கிரேன் ஆபரேட்டருக்கு உதவியாக போக்குவரத்து போலீசாரே இருந்து லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்ததை கண்டு வாகன ஓட்டிகள் பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்தனர்.