பிற வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு
கூடலூரில் அரசு பஸ்களை நிறுத்த ஒதுக்கிய இடங்களில், பிற வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அரசு பஸ்கள் நடுரோட்டில் பயணிகளை இறக்கி, ஏற்றுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
கூடலூர்,
கூடலூரில் அரசு பஸ்களை நிறுத்த ஒதுக்கிய இடங்களில், பிற வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அரசு பஸ்கள் நடுரோட்டில் பயணிகளை இறக்கி, ஏற்றுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
போக்குவரத்து பாதிப்பு
கூடலூர் நகரில் வாகன நெருக்கடி தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இங்கு வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. இந்தநிலையில் அரசு பஸ்கள் சாலைகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதால் அந்த சமயத்தில் பிற வாகனங்கள் செல்ல முடியாதபடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.
இதை கருத்தில் கொண்டு கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பந்தலூர், கேரளா செல்லும் பஸ்கள் பயணிகளை அழைத்து செல்வதற்காக சாலையோரம் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதேபோல் கூடலூரில் இருந்து ஓவேலி, ஊட்டி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் சக்தி விநாயகர் கோவில் அருகே சாலையோரம் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், பஸ்கள் நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.
சாலையில் நிறுத்தப்படும் பஸ்கள்
இதனால் பயணிகளை அழைத்து செல்வதற்காக வரும் அரசு பஸ்கள் சாலைகளில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பின்னால் வரும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் வரிசையாக நின்று போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. போக்குவரத்து போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு, இடையூறாக நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இருப்பினும் கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் வங்கி உட்பட பல்வேறு அலுவலகங்களுக்கு செல்வதற்காக, அரசு பஸ்கள் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். சில சமயங்களில் போக்குவரத்து போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. கூடலூரில் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் இந்த நிலை நீடிக்கிறது. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.