சேதம் அடைந்த சாலையால் போக்குவரத்து பாதிப்பு; அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்

நெல்லை டவுன் ஆர்ச் பகுதியில் சேதம் அடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

Update: 2022-11-17 20:20 GMT

நெல்லை டவுன் ஆர்ச் பகுதியில் சேதம் அடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

ஆர்ச் ரோடு

நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டவுன் ஆர்ச் பகுதியில் வாறுகால் கட்டும் பணி மற்றும் எஸ்.என்.ஹைரோட்டில் ரோடு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

இதில் ஆர்ச் பகுதியில் கழிவுநீர் செல்ல கீழ்மட்ட பாலம் மற்றும் வாறுகால் பணிகள் நடைபெற்றது. மேலும் ஆர்ச் பகுதியையொட்டி போக்குவரத்தை எளிமைப்படுத்தும் வகையில் கல்வித்துறை அலுவலகம் இடிக்கப்பட்டு ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது.

வாகன ஓட்டிகள் அவதி

இந்த நிலையில் நெல்லையில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள ரோடு சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் மழை தண்ணீர் தேங்கி வாகனங்கள் சிரமப்பட்டு செல்கின்றன. அதே நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் ரவுண்டானாவும் அமைத்துள்ளனர். ஆனால் இந்த ரவுண்டானா அங்கு சரியாக அமையவில்லை.

இதனால் வாகன ஓட்டிகள் முறையான ரவுண்டானா இல்லாமல் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே ஆர்ச் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் சரியான ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளத்தில் சிக்கிய மாணவிகள்

இதற்கிடையே காலை, மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பரபரப்பாக சென்று வரும் நிலையில், ஆர்ச் சாலை அருகே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையால் அதில் தண்ணீீர் தேங்கி கிடப்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது.

நேற்று காலை ஒரு மொபட்டில் பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த ஒருவர் அந்த பள்ளத்தில் சிக்கி தவித்தார். அப்போது அங்கிருந்த போக்குவரத்து போலீசார் பள்ளி மாணவிகளை மீட்டு போக்குவரத்தை சீர்படுத்தினர்.

எனவே அங்குள்ள ரோட்டை சீரமைத்து, சரியான ரவுண்டானாவும் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்