பெங்களூருவில் இருந்து மதுரைக்கு கடத்தல்:830 கிலோ புகையிலை பொருட்களுடன் 6 பேர் கைது

பெங்களூருவில் இருந்து மதுரைக்கு கடத்திய 830 கிலோ புகையிலை பொருட்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-04-08 20:23 GMT


மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே புகையிலை பொருட்களுடன் லாரி ஒன்று நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து மதுரைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களை, வேறு வாகனங்களுக்கு மாற்றி கொண்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் புகையிலை பொருள் கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த காசிராமன்(வயது 28), தருமபுரியை சேர்ந்த விக்ரம் (35), தயாநிதி (32), சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த கதிரவன் (42), வெள்ளைச்சாமி (42), திண்டுக்கல் சாணார்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிஷ்பாபு (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்த 830 கிலோ புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, 7 செல்போன்கள், ரூ.30 ஆயிரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதுபோல், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை அனுப்பி வைத்த கைலாஸ்குமார் என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்