மெரினா லூப் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு: 6-வது நாளாக மீனவர்கள் போராட்டம் - சீமான் நேரில் ஆதரவு தெரிவித்தார்

மீனவர்களின் போராட்டத்தால் மெரினா லூப் சாலையில் நேற்று போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

Update: 2023-04-19 05:05 GMT

சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கடந்த 12-ந்தேதி நொச்சிக்குப்பம் முதல் பட்டினம்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த மீன் கடைகள், உணவகங்களை போலீசார் உதவியுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

மீன் கடைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன் வியாபாரிகளும், மீனவ பெண்களும் கடந்த 13-ந்தேதி போராட்டத்தில் இறங்கினர். அப்போது, விற்பனைக்கு வைத்திருந்த மீன், நண்டு ஆகியவற்றை சாலையில் கொட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். நொச்சிக்குப்பம் முதல் பட்டினம்பாக்கம் வரையிலான மீன்பிடி பகுதிகளை மீன்பிடி மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து, நொச்சிக்குப்பம் - பட்டினம்பாக்கம் வரையிலான 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு லூப் சாலையில் படகை நிறுத்தியும், ஐஸ் பெட்டிகள், மரக்கட்டைகள் உள்ளிட்டவற்றை குறுக்கே வைத்தும் நேற்று 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, மீன்பிடி படகிலும், சாலையின் ஓரங்களிலும் கருப்பு கொடியை ஏற்றினார்கள். மேலும், சாலையின் நடுவில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் பந்தல்கள் அமைத்து கூட்டம், கூட்டமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தின் 6-வது நாளான நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அப்போது, சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

மீனவ மக்களின் இந்த இடத்தை பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று கூறியே சென்னை மாநகராட்சி எடுத்தது. இங்கு, நிரந்தர கட்டிடம் கட்டி மீன் கடைகளை மக்கள் போடவில்லை. அப்படி இருக்கும்போது இந்த இடத்தை காலி செய்ய வேண்டிய அவசியம் என்ன? மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். நினைவிடம் கட்டுவதற்கு காட்டும் வேகத்தை மீன் சந்தை கட்டுவதற்கு காட்டவில்லை.

மக்கள் இந்த இடத்தில் மீன் விற்பதால் யாருக்கும் எந்த இடையூறும் வந்ததில்லை. எனவே, நீதிபதி இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அன்பாக வேண்டுகிறேன். இது இந்த மக்களின் நீண்டகால வாழ்வாதாரம். மக்களை பார்க்கும் பொழுது இதயம் கனமாக உள்ளது.

தற்போது இங்கே நடக்கும் போராட்டம் பின்னர் நாடு முழுவதும் ஏற்படும் நிலையை ஏற்படுத்திவிட வேண்டாம். மீனவர்களின் குறைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும் வரை மக்களுடன் இருப்போம். மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அரசு நடந்துகொள்வது நல்லதல்ல.

மீன் கடைகள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மெரினா லூப் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களை வி.சி.க. தலைவர் திருமாவளவன் நேற்று இரவு 7 மணியளவில் நேரில் சென்று சந்தித்தார். அப்போது, அவர்களுடன் கலந்துரையாடி பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து, திருமா வளவன் நிருபர்களிடம் கூறுகையில், 'மீனவர்களை இந்த தொழிலில் இருந்து அப்புறப்படுத்துவது இயற்கைக்கு எதிரானது. மீனவர்களின் உணர்வை புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் எதுவும் அமைந்துவிடக்கூடாது. அதற்கேற்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவை அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

இதே பகுதியில் இவர்களுக்கு கடைகளை கட்டித்தர வேண்டும். இந்த பிரச்சினை தொடர்பாக வி.சி.க. சார்பில் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்வோம். உரிய முயற்சிகளை அரசு எடுக்கும் என்று நம்புகிறோம்' என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்