சென்னை மெட்ரோ ரெயில் பணிக்காக மயிலாப்பூரில் நாளை முதல் 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம்

சென்னை மெட்ரோ ரெயில் பணிக்காக மயிலாப்பூரில் நாளை முதல் 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

Update: 2022-12-23 01:48 GMT

சென்னை,

சென்னை மயிலாப்பூரில் உள்ள கச்சேரி சாலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமான பணிகளை கருத்தில்கொண்டு, போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டு கடந்த 10-ந்தேதி முதல் ஒரு வாரம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இது நன்றாக செயல்பட்டதால், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோரியப்படி இந்த போக்குவரத்து மாற்றங்கள் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கச்சேரி சாலை மற்றும் அதை சுற்றியுள்ள சாலைகளில் நாளை முதல் 3 ஆண்டுகளுக்கு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் வருமாறு:-

* முண்டக்கன்னி அம்மன் கோவில் தெருவில் இருந்து கச்சேரி சாலைக்கு வாகனங்கள் செல்வதை கட்டுப்படுத்தி, கல்விவாரு தெருவில் தற்போது உள்ள ஒருவழி பாதை அமைப்பு மாற்றியமைக்கப்பட்டு வாகனங்கள் கச்சேரி சாலையில் இருந்து முண்டக்கன்னி அம்மன் கோவில் தெருவுக்கு அனுமதிக்கப்படும்.

* லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலையை நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, கல்விவாரு தெரு வழியாக முண்டக்கன்னி அம்மன் கோவில் தெரு மற்றும் பஜார் சாலை வழியாக செல்லலாம்.

* சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து கச்சேரி சாலை வழியாக லஸ் சந்திப்பை நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, தேவடி தெரு, நடு தெரு மற்றும் ஆர்.கே.மடம் சாலை அல்லது மாதா சர்ச் சாலை வழியாகவும் செல்லலாம்.

* மாநகர பஸ் எண் '12 பி' லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் செல்ல தடை செய்யப்பட்டு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாகவும் திரும்பி வரும்போது வி.எம்.தெரு வரை வழக்கம்போல் வந்து டி.டி.கே.சாலை வழியாக செல்லலாம்.

* மாநகர பஸ் எண் '12 எக்ஸ்' லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் செல்ல தடை செய்யப்பட்டு, ஆர்.கே.மடம் சாலை மற்றும் தெற்கு கால்வாய் கரை சாலை வழியாகவும் திரும்பி வரும்போது மந்தைவெளி பஸ் நிறுத்தம் வரை வழக்கம்போல் வந்து வெங்கடகிருஷ்ணா சாலை மற்றும் ஆர்.கே.மடம் சாலை வழியாக செல்லலாம்.

மேற்கண்ட தகவல் சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்