வியாபாரிகள் கடையடைப்பு
கம்பம் புதிய பஸ்நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்பம் புதிய பஸ்நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 28 கடைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பஸ்நிலையத்திற்கு பயணிகள் வருகை குறைந்தது. மேலும் பஸ்நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளதால் பெண்கள் பஸ்நிலையத்துக்கு வர அச்சமடைவதாக புகார் கூறப்பட்டு வந்தது. இதனால் வியாபாரம் இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, வெளியூர்களில் இருந்து கம்பம் பஸ்நிலையத்திற்கு வரும் அனைத்து பஸ்களும் கம்பம் வடக்கு போலீஸ் நிலைய நிறுத்தத்திற்கு பின், சிக்னல் வழியாக பழைய பஸ்நிலையம், மாரியம்மன் கோவில், புதிய பஸ்நிலையம் தெற்கு வாயில் வழியாக வரவேண்டும். பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் அனைத்து பஸ்களும் மேற்கு வாசல் வழியாக செல்லவேண்டும். கம்பம் வடக்கு போலீஸ் நிலையம் மற்றும் சிக்னல், காந்தி சிலை தவிர வேறு எந்த இடங்களிலும் பஸ்களை நிறுத்த கூடாது. கம்பம் பஸ்நிலையத்தில் மேற்கு நுழைவு வாயில் அருகே 2 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.