கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன்கள் வரத்து குறைந்ததால் வியாபாரிகள் கவலை

கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன்கள் வரத்து குறைந்து உள்ளதால் வியாபாரிகள் கவலையடைந்து உள்ளனர்.

Update: 2022-07-29 19:03 GMT

மீன் மார்க்கெட்

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள் மற்றும் இறால் கம்பெனிகள் செயல்படுகின்றன. கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி, மந்திரிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் நாட்டுப்படகு மூலம் பிடிக்கப்படும் மீன்களும், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் விசைப்படகு மூலம் பிடிக்கப்படும் மீன்களும் விற்பனைக்கு வருகின்றன. இதுமட்டுமில்லாமல் ராமநாதபுரம், பாம்பன், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலமாக மீன்களும் விற்பனைக்கு வருகின்றன. இந்த மீன்களை வாங்குவதற்கு திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்களில் வியாபாரிகள் தினமும் வந்து செல்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவதால் மீன்களின் வரத்து அதிகமாக இருக்கும்.

மீன்கள் வரத்து குறைந்தது

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாலும், இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்வதாலும் சில நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மூலம் வரக்கூடிய மீன்களின் வரத்து குறைந்தது. இதனால் மீன்களை வாங்குவதற்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் குறைந்தது.

தற்போது ஆடி மாதமாக இருப்பதால் அம்மனுக்கு உகந்த மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் பெரும்பாலான மக்கள் அசைவம் சாப்பிடாமல் சைவத்திற்கு மாறியுள்ளனர். மேலும் ஆடி மாதங்களில் கோவில் திருவிழாக்களும், சிறப்பு வழிபாடுகளும் நடந்து வருவதால் மீன்களின் வரத்தும், விற்பனையும் குறைந்துள்ளது. இதேபோன்று கோழி, ஆடு ஆகியவற்றின் இறைச்சி விற்பனையும் குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் கவலையடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்