பன்றி காய்ச்சலுக்கு வியாபாரி பலி
வாணியம்பாடியில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வியாபாரி ஒருவர் பலியானார். இதன் காரணமாக அந்தப்பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
பன்றிக்காய்ச்சல்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 50). இவர் கடந்த 5 நாட்களுக்கு முன் நுரையீரல் பாதிப்பு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
ஆனால் உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கடந்த 31-ந் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக அவரை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரவிக்குமார் இறந்து விட்டார்.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை....
இதனை தொடர்ந்து அவரது உடல் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து குடும்பத்தினரிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர்.
ரவிக்குமார் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலிருந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனை மற்றும் நகராட்சி சுகாதார துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. வாணியம்பாடிக்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்ட அவரது உடல் நேரடியாக மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது,.
இங்கு சுகாதாரத்துறையினர் ஆலோசனைப்படி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை போல் நகராட்சி பணியாளர்கள் முன்னிலையில் ரவி்குமாரின் உடல் 20 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டது.
சுகாதார நடவடிக்கைகள்
மேலும் அப்பகுதி முழுவதும் தூய்மை பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். இங்கு செயல்படும் கல்விநிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சுகாதார நடவடிக்கைகளில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் நகராட்சிக்கு ஒத்துழைத்து முக கவசம் அணிந்து பணியாளர்கள் தெரிவிக்கும் சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்க அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.