டிராக்டர் கவிழ்ந்து மேற்குவங்க தொழிலாளி சாவு
டிராக்டர் கவிழ்ந்து மேற்குவங்க தொழிலாளி இறந்தார்.
திருமருகல் அருகே டிராக்டர் கவிழ்ந்து மேற்கு வங்க தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
டிராக்டர் கவிழ்ந்து விபத்து
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை திருவைக்காவூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் பாண்டியன் (வயது36). டிராக்டர் டிரைவர். இவர் நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருக்கண்ணபுரம் நரிமேனி ஆற்றில் தடுப்பணை கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். தடுப்பனை கட்டுமான பணிக்காக இரும்பு கம்பிகளை டிராக்டரில் ஏற்றி கொண்டு நேற்று காலை 7 மணியளவில் சென்று கொண்டிருந்தார்.
அந்த டிராக்டரில் ஏற்றப்பட்ட இரும்பு கம்பிகளின் மீது மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்த ஹோகன் மொண்டல் (33), அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஜோடிமொய் கோஸ் (26), கோபிண்டா மொண்டல் (32), தீபன் மொண்டல் (38), கணேஷ் மொண்டல் (38) ஆகிய 5 பேர் அமர்ந்து இருந்தனர்.
4 பேர் படுகாயம்
திருக்கண்ணபுரம் ராமநந்தீஸ்வரர் சுடுகாடு அருகில் டிராக்டர் ஆற்றங்கரையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டரில் சென்றவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
இதில் ஹோகன் மொண்டல் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த மற்ற 4 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.