குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் அருமையாக உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதில் குளிப்பதற்காக தென்காசி மாவட்டத்தில் இருந்து மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி 2 பெண்கள் பலியானார்கள். இதனால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கடும் வெயில் அடித்தது. ஆனாலும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் குற்றாலத்தில் குவிந்தனர். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மெயின் அருவியில் ஆண்களைவிட பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் நிறுத்தி போலீசார் குளிக்க ஏற்பாடு செய்தனர். ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.