பைக்காராவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையைெயாட்டி பைக்காராவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

Update: 2022-12-29 18:45 GMT

ஊட்டி

தொடர் விடுமுறையைெயாட்டி பைக்காராவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

பைக்காரா

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் பைக்காரா படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில மாதங்களாக பெய்த தொடர் மழையால் அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து 80 அடியாக உள்ளது.

தற்போது படிக்கட்டுகள் வரை தண்ணீர் இருப்பதோடு, நீல நிறத்தில் கடல்போல காட்சி அளிக்கிறது. இங்கு சிறிய மலைக் குன்றுகள், தீவு போல காணப்படும் அணை பகுதி, அடர்ந்து வளர்ந்த மரங்களை கொண்ட வனப்பகுதி வழியாக படகு சவாரி செய்வது சுற்றுலா பயணிகளை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. சில சமயங்களில் தண்ணீர் அருந்த வரும் வனவிலங்குகளை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கிறது.

குதூகலம்

இந்த நிலையில் புத்தாண்டையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இவர்கள் தாவரவியல் பூங்காவிற்கு பிறகு பைக்காரா படகு இல்லத்திற்கு அதிகளவில் வருகின்றனர்.

இங்கு சவாரி செய்வதற்காக 8 இருக்கைகள் மற்றும் 10 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகுகள், அதிவேக படகுகள் என மொத்தம் 26 படகுகள் உள்ளன. இதில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் ஆனந்தமாக சவாரி செய்தனர். பளிச்சென்று கண்ணாடி போல் தூய்மையாக காட்சியளிக்கும் தண்ணீரை கிழித்துக்கொண்டு சீறியபடி செல்லும் அதிவேக படகில் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைகின்றனர்.

நீண்ட வரிசை

இதற்கிடையே கடந்த 2 நாட்களாக பகலில் நன்றாக வெயில் அடிப்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சாலைகளில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளும் நீண்ட வரிசையில் காத்திருந்து சவாரி செய்யும் நிலை உள்ளது.

ஊட்டியில் நேற்று அதிகபட்சமாக 22 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 8 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவானது. மேலும் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 76 சதவீதமாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்