கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வாரவிடுமுறையையொட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில், வார விடுமுறையையொட்டி நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக கேரளா சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், பில்லர் ராக், குணா குகை, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா மற்றும் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொடைக்கானலில் நேற்று அவ்வப்போது பனி மூட்டம் நிலவியது. பகல் நேரத்தில் குளிர்ச்சியான சூழலில், நட்சத்திர ஏரியில் சாரல் மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். மேலும் ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்து வாரவிடுமுறையை சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அனுபவித்தனர். இதனிடையே நேற்று பகல் நேரத்தில் மேகமூட்டம் தரை இறங்கியது. பிற்பகல் 2 மணி முதல் மாலை வரை விட்டுவிட்டு மிதமான மழையும், அதனை தொடர்ந்து சாரல் மழையும் பெய்தது. சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழில் புரிவோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.