கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
படையெடுத்த சுற்றுலா பயணிகள்
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தொடர் விடுமுைறயையொட்டி கடந்த 2 தினங்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
இந்தநிலையில் நேற்று சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக காலை முதல் மாலை வரை இதயத்தை வருடும் இதமான சூழ்நிலை நிலவியது. அதிகாலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலா பயணிகள் வாகனங்கள் படையெடுத்தனர்.
இதனால் பெருமாள் மலை முதல் நகரில் உள்ள சுற்றுலா இடங்கள் வரை சுமார் 25 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைப்பாதையில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன. நேற்று மட்டும் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்களும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
திரும்பி சென்ற வாகனங்கள்
போக்குவரத்தை சீரமைக்க போலீசாருடன் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டனர். எனினும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பித்தது. சுற்றுலா வந்தவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் கழிவறை, குடிநீரின்றி தவித்தனர்.
இதில் குறிப்பாக வாகனங்கள் ஒரே இடத்திலேயே பல மணி நேரம் நின்றதால் தாங்கள் கொண்டு வந்த உணவுகளை வீடுகளின் வாசல்களிலும், சாலைகளின் ஓரங்களிலும் அமர்ந்து அருந்தி விட்டுச் சென்றனர்.
கொடைக்கானல் நகர் பகுதிக்கு வராமலேயே பல வாகனங்கள் திரும்பிச் சென்றன. இதுமட்டுமின்றி நகருக்கு வருகை தந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள் பல மணி நேரம் தாமதமாக வந்து புறப்பட்டன. வாரச்சந்தைக்கு வந்த காய்கறி வியாபாரிகளும் காலையில் கொண்டு வந்த காய்கறிகளை பிற்பகலுக்கு மேல் தான் சந்தைக்கு கொண்டு வர முடிந்தது.
படகு சவாரி
போக்குவரத்து நெரிசலை தாண்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வந்தடைந்தனர். இவர்கள் பில்லர்ராக், மோயர் பாயிண்ட், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா இடங்களை கண்டுகளித்தனர்.
சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அவ்வப்போது மேககூட்டங்கள் தரை இறங்கி தள்ளாடின. இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.
மேலும் பிரையண்ட் பூங்கா,ரோஜா பூங்காகளுக்கு சென்று 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி மேற்கொண்டு உற்சாகமடைந்தனர்.