தடையை மீறும் சுற்றுலா பயணிகள்

வெள்ளமலை டனல் பகுதியில் பழுதான இரும்பு பாலத்தில் காத்திருக்கும் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் தடையை மீறி வருகின்றனர்.

Update: 2023-09-11 19:45 GMT

வால்பாறை

வெள்ளமலை டனல் பகுதியில் பழுதான இரும்பு பாலத்தில் காத்திருக்கும் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் தடையை மீறி வருகின்றனர்.

வெள்ளமலைடனல்

வால்பாறை பகுதியில் சோலையாறு அணை, நீராறு அணை, சின்னக்கல்லாறு அணை, சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சிமுனை, வெள்ளமலைடனல் மற்றும் கூழாங்கல் ஆறு ஆகிய சுற்றுலா தலங்கள் உள்ளன.

இதில் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதிப்பது இல்லை. மேலும் வெள்ளமலை டனல் பகுதிக்கு இரும்பு பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் செல்ல நீர்வள ஆதாரத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.

தடையை மீறி...

ஆனால் தடையை மீறி இரும்பு பாலம் வழியாக வெள்ளமலை டனல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இந்த பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு கம்பிகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. மேலும் பாலமும் வலுவிழந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த பாலத்தை பயன்படுத்த தடை விதித்து, நீர்வள ஆதாரத்துைறயினர் தடை விதித்து உள்ளனர். ஆனாலும், அந்த தடையை சுற்றுலா பயணிகள் மீறி சென்று, அங்குள்ள சிறிய நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர்.

நடவடிக்கை

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

வெள்ளமலை டனல் பகுதியில் கடந்த 1970-ம் ஆண்டு இரும்பு பாலம் கட்டப்பட்டது. தற்போது அந்த பாலம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. அதிக பாரம் ஏறும் சமயத்தில், அந்த பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளது.

அங்கு ஆபத்து காத்திருப்பதை உணராத சுற்றுலா பயணிகள் தடையை மீறி சென்று வருகின்றனர். எனவே அவர்களை கட்டுப்படுத்துவதோடு அந்த பாலத்தை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்