சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு

நீலகிரி மலை ரெயிலின் 115-வது ஆண்டு விழாவையொட்டி, சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-10-15 18:45 GMT

ஊட்டி, 

நீலகிரி மலை ரெயிலின் 115-வது ஆண்டு விழாவையொட்டி, சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

மலை ரெயில்

1908-ம் ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி முதல் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை 46.61 கிலோ மீட்டர் தூரம் ரெயில் பாதை உள்ளது. மலை ரெயிலில் பயணிக்க உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நூற்றாண்டை கடந்து மக்களை கவர்ந்திழுக்கும் மலை ரெயில் கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந் தேதி யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஊட்டி ரெயில் நிலையம் மற்றும் மலை ரெயில் புகழ் பெற்று விளங்குகிறது.

115-வது தினம்

ஊட்டி மலை ரெயில் சேவை தொடங்கி 114 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்தநிலையில் நேற்று மலை ரெயில் 115-வது தின விழா ஊட்டி ரெயில் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. நீலகிரி மலை ரெயில் ஆர்வலர் நட்ராஜ் தலைமையில் நிர்வாகிகள், ஊட்டிக்கு மலை ரெயிலில் வந்த ரெயில் ஓட்டுநர், சுற்றுலா பயணிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி, மலை ரெயிலின் சிறப்புகளை எடுத்துரைத்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

குழந்தைகள் குதூகலம்

இந்த ரெயிலில் வருவதற்காக 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தேன். இந்த பயணம் பிரம்மிப்பு ஊட்டுகிறது. அடுத்த முறை நண்பர்களுடன் இந்த ரெயிலில் வர வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளுக்கு செல்வதை விட நன்றாக உள்ளது. மேலும் குழந்தைகளுடன் வந்தோம், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிக குதூகலம் கொடுக்கிறது. இனிமேல் தேர்வு விடுமுறையில் கண்டிப்பாக இங்கு வர வேண்டும் என்று குழந்தைகள் கூறி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்