திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.. சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை நீடிப்பு
பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடர்ந்து உபரித் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை நீடிக்கிறது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இந்த அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதில் வெள்ள அபாய அளவைக் கடந்திருந்த பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் மழையின் காரணமாக மேலும் அதிகரித்தது.
இதையடுத்து வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில் கடந்த திங்கள்கிழமை முதல் இந்த அணையிலிருந்து உபரித் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் திற்பரப்பு அருவி மற்றும் தாமிரபரணியாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மழை சற்று தணிந்த நிலையில் காணப்படுகிறது. இதையடுத்து அணைகளுக்கு உள்வரத்து நீரின் அளவு சற்று குறைந்து காணப்பட்டது. எனினும் பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடர்ந்து உபரித் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இன்று மாலை 4 மணி நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 2100 கன அடி தண்ணீர் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. அப்போது அணையிலிருந்து வினாடிக்கு 3057 கன அடிதண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டது.மேலும் பாசனக் கால்வாயில் வினாடிக்கு 488 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 43,51 அடியாக இருந்தது.
பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரித் தண்ணீர் தொடர்ந்து 3 ஆவது நாளாக இன்றும் வெளியேற்றப்பட்ட நிலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.