சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்-பரிசலில் சென்றும், அருவியில் குளித்தும் மகிழ்ச்சி

Update: 2022-12-18 18:45 GMT

பென்னாகரம்:

விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பரிசலில் சென்றும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு விடுமுறை தினங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்கள் காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசிப்பதுடன், பரிசல் சவாரி மேற்கொள்வார்கள்.

இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது.

மகிழ்ச்சி

இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்தனர். மேலும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பாறைகளுக்கிடையே பரிசல் சவாரி செய்து, காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்து, மகிழ்ந்தனர். மேலும் முதலை பண்ணை, பூங்கா ஆகியவற்றையும் சுற்றி பார்த்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஒகேனக்கல்லில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடந்தது. பாதுகாப்பு கருதி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்