தொடர் விடுமுறையையொட்டிஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்படகு சவாரி செய்து உற்சாகம்
தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஏரியில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.
சேலம்
தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஏரியில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.
சுற்றுலா பயணிகள்
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சனி, ஞாயிறு மற்றும் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி என தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் வழக்கத்தைவிட நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர்.
இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்பட்டது. குறிப்பாக நேற்று காலை முதல் மாலை வரையிலும் அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் பூங்கா ரோஜா தோட்டம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை அவர்கள் சுற்றி பார்த்து பொழுதை கழித்தனர்.
படகு சவாரி செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டதால் படகு இல்லத்தில் கூட்டம் அலைமோதியது. பின்னர் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து குடும்பத்தினருடன் படகு சவாரி செய்து உற்சாகமடைந்தனர்.
தங்கும் விடுதிகள் நிரம்பின
இதனிடையே, சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் பெரும்பாலான தங்கும் விடுதிகள் அறைகள் முழுவதும் நிரம்பின. இதனால் நேற்று முன்தினம் இரவு முன்பதிவு செய்யாத சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். பின்னர் அவர்கள் தங்களது கார்களை சாலையோரமாக நிறுத்தி அதில் உறங்கியதை காணமுடிந்தது.
ஏற்காட்டில் நேற்று காலையில் லேசான சாரல் மழை பெய்ததால் இதமான சூழ்நிலை நிலவியது. அதேநேரத்தில் சுற்றுலா பயணிகள் வருகையால் ஏற்காட்டில் நேற்று மாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) ஏற்காட்டுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.