"தைரியம் இருந்தால் என்னை தொட்டு பார்க்கட்டும்"

காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வதா? என்று கொடைக்கானலில் நடந்த நடைபயணத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியதுடன், தைரியம் இருந்தால் என்னை தொட்டு பார்க்கட்டும் என்று கூறினார்.

Update: 2023-09-12 17:30 GMT

கொடைக்கானலில் நடைபயணம்

'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில், தமிழகம் முழுவதும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 5 நாட்கள் நடைபயணத்தை கொடைக்கானலில் அவர் நேற்று தொடங்கினார்.

கொடைக்கானல் நாயுடுபுரம் சித்திவிநாயகர் கோவில் பகுதியில் இருந்து, தனது நடை பயணத்தை தொடங்கிய அவர் கான்வென்ட் ரோடு, ஏரிச்சாலை, ஏழுரோடு சந்திப்பு, அண்ணா சாலை வழியாக மூஞ்சிக்கல் வரை நடந்து வந்தார்.

அப்போது வழிநெடுகிலும் அண்ணாமலைக்கு மேளதாளங்கள் மற்றும் வாண வேடிக்கைகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மலர் தூவி பெண்கள் வரவேற்றனர். குழந்தைகள் பலர், அண்ணாமலைக்கு மாலைகளை அணிவித்தனர்.

விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை

இதைத்தொடர்ந்து மூஞ்சிக்கல் பகுதியில் நடந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் இதுவரை 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபயணம் சென்றுள்ளேன். தென் தமிழகம் வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை. மத்திய அரசு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கியது. ஆனால் அதில் தண்ணீர் வருவதில்லை.

கொடைக்கானல் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு தார்சாலை வசதி இல்லை. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக இருக்க இங்கு வருகை தருகின்றனர். ஆனால் இங்கு வாழும் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. சுற்றுலாத்தலங்கள் வளர்ச்சி பாதையில் இல்லை.

9 வாக்குறுதிகள்

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கொடைக்கானலுக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோவிலுக்கு அதிகாலையில் சென்று வழிபாடு நடத்தியுள்ளார். அவரும் வெற்றியை பெற்றார். ஆனால் இப்பகுதிக்கு 9 வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் அளித்திருந்தார்.

பதவி ஏற்று 29 மாதங்கள் கடந்த பின்னரும் ஒரு வாக்குறுதியை கூட அவர் நிறைவேற்றவில்லை. குறிப்பாக பல்நோக்கு மருத்துவமனை, பழனி-கொடைக்கானல் ரோப்கார் திட்டம், ஆண்களுக்கான அரசு கலைக்கல்லூரி ஆகியவற்றை நிறைவேற்றவில்லை.

கொடைக்கானலில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையத்தில் சூரிய புள்ளிகள் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். 100 ஆண்டுகள் அவர்கள் நடத்திய ஆராய்ச்சியில் ஒரு மென்பொருளை உற்பத்தி செய்து, தற்போது சூரியனை ஆராய்ச்சி செய்ய அனுப்பியுள்ள ஆதித்யா விண்கலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி

கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில், தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களுக்காக, ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைந்துள்ளனர். மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 11-வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஜி-20 மாநாடு சிறப்பாக நடத்தப்பட்டது.

பிரதமர் மோடி மீதும், 78 மத்திய மந்திரிகள் மீதும் எள்ளளவு கூட குற்றச்சாட்டு கிடையாது. ஊழல் இல்லாத ஆட்சி நடைபெறுகிறது. ஏழைகள் முன்னேற பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது. 42 கோடி ஏழை-எளிய மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 26 கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளனர். இதில் ஊழல் செய்ய கற்று கொடுத்த லாலு பிரசாத் யாதவ், விஞ்ஞான ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி நடத்தும் தி.மு.க., மதத்தால் பிரிவுபடுத்தி மக்களை தனிமைப்படுத்திய மம்தா பானர்ஜி போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த கூட்டணியின் மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை பிரதமராகவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சராகவும் முயற்சி செய்து வருகின்றனர்.

கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம்

தமிழகத்தில் பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க. அளித்தது. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு தான் வழங்குவதாக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் 55 சதவீத பெண்கள் பாதிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. கடன் வாங்குவதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தற்போது வரை ரூ.7 லட்சத்து 63 ஆயிரம் கோடி கடன் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது.

தி.மு.க.வுக்கு 30 சதவீத கமிஷன் கிடைக்கும் என்பதால் அதிக அளவில் கடன் வாங்குகின்றனர். தி.மு.க. அமைச்சர்கள் பயத்தில் உள்ளனர்.

'என்னை தொட்டு பார்க்கட்டும்'

சென்னையில் நேற்று முன்தினம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதில் எங்களை கைது செய்யாமல் விட்டதற்காக 3 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர். காவல்துறைக்கு பயத்தை உண்டாக்குகின்றனர். காவல்துறை மீது வன்மம் காட்டுகின்றனர்.

துணிவு மற்றும் நேர்மையுடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். தைரியம் இருந்தால் என்னை தொட்டுப் பார்க்கட்டும். தலைவர்கள் மீது குற்றம் சாட்டுவதை விட வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.

400 இடங்களில் வெற்றி

நேற்று முன்தினம் உதயநிதி ஒரு கொசுவர்த்தி படத்தை பதிவிடுகிறார். அன்றைய தினமே, டெங்கு பாதிப்பால் சென்னையில் ஒரு சிறுவன் இறந்துள்ளான். வாரிசு அரசியல் வரக்கூடாது. தி.மு.க. ஒழிக்கப்பட வேண்டும். அழிக்கப்பட வேண்டும். இதற்காக தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மோடி தலைமையிலான கூட்டணிக்கு வெற்றியை தர வேண்டும்.

அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிற நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெற்று, 3-வது முறையாக மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிவடைந்த உடன் அண்ணாமலையுடன் ஏராளமான தொண்டர்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

--------

கூட்டத்துக்குள் புகுந்த காட்டெருமை

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் நடைபயணத்தை தொடங்க பா.ஜ.க. தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர். அப்போது திடீரென காட்டெருமை ஒன்று கூட்டத்துக்குள் புகுந்தது. இதனைக்கண்ட தொண்டர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதேபோல் காட்டெருமையும் மிரண்டு அங்கும், இங்குமாக ஓடியது. ஒரு கட்டத்தில் அங்குள்ள தனியார் தோட்டத்துக்குள் காட்டெருமை சென்று விட்டது. அதன்பிறகு தொண்டர்கள் மீண்டும் திரண்டு வந்து நடைபயணத்தில் பங்கேற்றனர்.

குதிரை சவாரி செய்து அசத்தல்

கொடைக்கானல் நாயுடுபுரத்தில் நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை, ஏரிச்சாலை வழியாக வந்தார். அப்போது அங்கிருந்த தொண்டர்கள் அவரை குதிரை சவாரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். தொண்டர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், அண்ணாமலை குதிரை மீது ஏறி சிறிது தூரம் சவாரி செய்து அசத்தினார். இதனைக்கண்ட தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். நடைபயணம் மேற்கொண்ட இடங்களில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பா.ஜ.க. கட்சியினர் 13 பேருக்கு அவர் நன்றியை தெரிவித்து கொண்டார்.

பேச்சை நிறுத்திய அண்ணாமலை

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள் மத்தியில் நேற்று மாலை அண்ணாமலை பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது மாலை 6.30 மணி அளவில் அருகே உள்ள பள்ளிவாசலில் 'பாங்கு' ஒலிக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் தனது பேச்சை நிறுத்தி கொண்டார். 'பாங்கு' ஒலித்து முடித்தபிறகு மீண்டும் அவர் தனது பேச்சை தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

---

Tags:    

மேலும் செய்திகள்