விலையை கேட்டாலே அதிர வைக்கும் தக்காளி

திருக்காட்டுப்பள்ளி, பூதலூரில் தக்காளி விலையை கேட்டாலே அதிர வைக்கும் வகையில் ரூ.200-க்கு விற்பனையானது.

Update: 2023-07-30 19:39 GMT

திருக்காட்டுப்பள்ளி, பூதலூரில் தக்காளி விலையை கேட்டாலே அதிர வைக்கும் வகையில் ரூ.200-க்கு விற்பனையானது.

காய்கறி விலை ஏற்றம்

சைவ சமையல் என்றாலும், அசைவ சமையல் என்றாலும் பல்லாரி, தக்காளி ஆகிய காய்கறிகளின் தேவை அதிகமாக உள்ளது. இதுதவிர கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், அவரைக்காய், சவ்சவ் என சமையலுக்கான காய்கறிகளின் பட்டியல் மிகவும் நீளமாக உள்ளது. அன்றாட தேவைக்கான இந்த காய்கறிகளை யாரும் தினமும் கடைக்கு சென்று வாங்குவது கிடையாது. ஒருவாரத்துக்கு தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்குவதே பெரும்பாலோனோரின் வழக்கம்.

காய்கறிகளை மொத்தமாக வாங்கும்போது முன்பெல்லாம் ரூ.150 முதல் ரூ.200 வரை மட்டுமே செலவாகும். ஆனால் இன்று தக்காளி, பீன்ஸ், கேரட் போன்ற காய்கறின் விலையை கேட்கும்போது சமையல் செய்வதா? வேண்டாமா? என இல்லத்தரசிகள் யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு காய்கறிகளின் விலை ஏற்றம் மேல் ஏற்றம் கண்டுள்ளது.

இல்லத்தரசிகள் புலம்பல்

காய்கறிகளில் 3, 4 ரக காய்கறிகளை வாங்கினாலே இப்போதெல்லாம் 'மணிபர்ஸ்' காலியாகி விடுவதாக இல்லத்தரசிகள் புலம்புகிறார்கள். குறிப்பாக தக்காளியின் விலையை கேட்டாலே நிலநடுக்கம்போல அதிர்வு ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் இளசுகள் விமர்சிக்கும் அளவுக்கு காய்கறி விலை நிலவரம் கிறு,கிறுக்க வைக்கிறது.

தக்காளியின் விலை கடந்த சில வாரங்களாக சதத்துக்கு குறையாமல் ஏறுமுகத்தில் இருப்பது ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.200-க்கு விற்பனை

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் உள்பட பெரும்பாலான இடங்களில் நேற்று தக்காளி ரூ.150-ஐ தாண்டி விற்பனையானது. இந்த நிலையில் திருக்காட்டுப்பள்ளி, பூதலூரில் நேற்று தக்காளி விலை கிலோ ரூ.200 என்ற புதிய உச்சத்தை தொட்டது. தக்காளியை வாங்கினால் மளிகை பொருட்கள் உள்பட வேறு எந்த பொருட்களையும் வாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்தனர். பூதலூரில் தக்காளி கிலோ ரூ.200-க்கு கிடைத்த நிலையில், திருக்காட்டுப்பள்ளி மார்க்கெட்டில் சிறிய அளவிலான தக்காளி கிலோ ரூ.180 எனவும், பெரிய ரக தக்காளி ரூ.200 எனவும் விற்கப்பட்டது.

குறைய வாய்ப்பு

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மீன், இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் தக்காளி விலை உயர்வு காரணமாக பலர் 200 கிராம், 250 கிராம் என்ற அளவில் வாங்கி சென்று நிலைமையை சமாளித்தனர். தக்காளி விலை விரைவில் குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தக்காளியை 'ஏழைகளின் ஆப்பிள்' என செல்லமாக அழைப்பார்கள். ஆனால் அதன் தற்போதைய விலை நிஜ ஆப்பிள் விலையே பரவாயில்லை என எண்ண தோன்றுவதாக திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் பகுதியை சேர்ந்த இல்லத்தரசிகள் விரக்தியுடன் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்