தக்காளி கிலோ ரூ.130-க்கு விற்பனை

நாகர்கோவிலில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல் சின்ன வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் ஏறுமுகமாக உள்ளது.

Update: 2023-07-09 20:33 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல் சின்ன வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் ஏறுமுகமாக உள்ளது.

காய்கறிகளின் விலை உயர்வு

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதில் காய்கறிகள் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. அதிலும் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி, மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம் போன்றவை தங்கத்தின் விலையை போல தினமும் அதிகரித்து வருகிறது.

குமரி மாவட்ட மொத்த மார்க்கெட்டுகளில் கடந்த மாதம் தொடக்கத்தில் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி திடீரென விலை உயர்ந்தது. ஜூலை மாதம் தொடக்கத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் கடந்த 2 நாட்களாக தக்காளி விலையில் சரிவு ஏற்பட்டு ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெங்காயம்

இந்த நிலையில் நேற்று தக்காளி விலை மீண்டும் உயர்ந்தது. அதாவது நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கும், சில்லரை விலையில் ரூ.130-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிலோ மிளகாய் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று ரூ.140-க்கு விற்பனையானது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ மொத்த விலை ரூ.130-ல் இருந்து ரூ.180-ஆக உயர்ந்தது.

இதேபோல் ஒரு கிலோ இஞ்சி கடந்த 6-ந் தேதி வரை ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று ரூ.280-ஆக உயர்ந்தது.

காய்கறி விலை நிலவரம்

நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டில் விற்பனையான காய்கறிகளின் நேற்றைய விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:-

உருளைக்கிழங்கு- ரூ.30, பல்லாரி- ரூ.27, தடியங்காய்- ரூ.27, புடலங்காய்- ரூ.40, வெள்ளரிக்காய்- ரூ.35, பீட்ரூட்- ரூ.26, மிளகாய்- ரூ.140, சேனைக்கிழங்கு- 55, நாட்டு கத்திரிக்காய்- ரூ.70, வரி கத்திரிக்காய்- ரூ.38, வழுதனங்காய்- ரூ.50, முட்டைக்கோஸ்- ரூ.35, இஞ்சி- ரூ.280 என விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்