தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு

ஊட்டியில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2023-07-31 21:15 GMT

ஊட்டி

ஊட்டியில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி

சமையலில் உணவு வகைகளுக்கு தக்காளி இன்றியமையாதது. தக்காளி இருந்தால் தான் உணவின் சுவை கூடும். அப்படி இருக்க வரத்து குறைவால் கடந்த மாதம் தக்காளி விலை ரூ.110-ஐ தாண்டி விற்பனையானது. பின்னர் விலை சற்று குறைந்து காணப்பட்டது. இந்தநிலையில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்து உள்ளது. இதனால் பெண்கள் தக்காளி வாங்கும் அளவை குறைத்து உள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதனால் நீலகிரி மட்டுமின்றி பல்வேறு இடங்களிலும் தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை கிடு, கிடுவென உயர்ந்தது.

மீண்டும் விலை அதிகரிப்பு

கடந்த மாதம் 4-ந் தேதி ஊட்டி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.105-க்கும், நேற்று முன்தினம் ரூ.120-க்கும் விற்பனையானது. ஆனால், வரத்து குறைவால் தற்போது மீண்டும் விலை அதிகரித்து உள்ளது. அதன்படி நேற்று உழவர் சந்தையில் தக்காளி ரூ.130-க்கு விற்கப்பட்டது. கடந்த மாதத்தை விட தக்காளி விலை அதிகரித்து உள்ளது.

இதனால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.150-க்கும், சில்லறை கடைகளில் கிலோ ரூ.160-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் தவித்து வருகின்றனர். இருப்பினும், உழவர் சந்தையில் விலை ரூ.20 குறைவாக இருப்பதால் பொதுமக்கள் அங்கு தக்காளி வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே சின்ன வெங்காயம் விலை குைறந்து ரூ.94-க்கு விற்கப்பட்டது.

18 டன்

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ஊட்டி உழவர் சந்தைக்கு தினசரி 3 டன்னும், நீலகிரியில் பிற இடங்களுக்கு 18 டன்னும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதன்படி கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து 75 சதவீதமும், காரமடை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 25 சதவீதமும் கொண்டு வரப்படுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் மைசூருவில் இருந்து மட்டும் தான் தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது. இப்போதைக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்