கோயம்பேடு மார்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி - கிலோ ரூ.13-க்கு விற்பனை...!

கோயம்பேடு மார்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.13-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-06-30 06:15 GMT

போரூர்,

சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு ஆந்திரா மாநிலம் பலமனேர், புங்கனூர் கர்நாடகா மாநிலம் குண்டுப்பள்ளி, கோலார் ஆகிய பகுதிகளில் இருந்து இன்று 56 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்துள்ளது.

கடந்த மே மாதம் பெய்த திடீர் கோடை மழையால் தமிழகத்தில் திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வியாபாரிகளும் கோயம்பேடு சந்தைக்கு தினசரி கொண்டு வரப்படும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தக்காளியை அதிகளவில் கொள்முதல் செய்து வந்தனர்.

இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்து விலை திடீரென பல மடங்கு அதிகரித்தது. உச்ச பட்சமாக சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ120-யை கடந்து விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் மீண்டும் வழக்கம் போல் உற்பத்தி தொடங்கி தக்காளியின் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து அதிகரித்து உள்ளதால் அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதனால் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ13-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் மார்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 20-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலையின் வீழ்ச்சி இல்லத்தரசிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்