தக்காளி விலை கடும் வீழ்ச்சி; கிலோ ரூ.5-க்கு ஏலம்
கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து, கிலோ ரூ.5-க்கு ஏலம் போனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து, கிலோ ரூ.5-க்கு ஏலம் போனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
வரத்து அதிகரிப்பு
கிணத்துக்கடவில் தினசரி காய்கறி சந்தை உள்ளது. கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சந்்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் நேற்று நடந்த ஏலத்திற்கு, தினசரி காய்கறி சந்தைக்கு 7 டன் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த சில வாரத்திற்கு முன்பு கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு ஏலம் போனது.
தற்போது தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் வெளியூரில் இருந்து கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளிகளை கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் நேற்று நடைபெற்ற ஏலத்தில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. ஏல ஆரம்பத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.8-க்கு ஏலம் போனது.
விலை வீழ்ச்சி
அதன் பின்னர் முடிவில் ரூ.5-க்கு ஏலம் போனது. தக்காளி விலை வீழ்ச்சி அடைந்ததால், கிராம பகுதிகளில் இருந்து தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனால் பராமரிப்பு செலவு, தொழிலாளர்களுக்கு போன்றவற்றுக்கு கூட கட்டுப்படி ஆகவில்லை. இதன் காரணமாக நஷ்டம் அடைந்து உள்ளனர்.
கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தொடர்ந்து தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால், கிணத்துக்கடவு பகுதியில் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் தக்காளி சில்லரை விலையில் ஒரு கிலோ ரூ.15 ஆக குறைந்து உள்ளது. கடந்த சில வாரங்களாக தக்காளி விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது விலை குறைந்ததால் தக்காளிகளை வாங்கும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.