தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும்

சுங்க கட்டணத்தை ரத்து செய்தால் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா கூறினார்.

Update: 2023-07-16 19:06 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் வணிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா கலந்துகொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிடங்கு வசதி

தமிழகத்தில் காய்கறி, மளிகைப்பொருட்கள் என சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, மழைக்காலங்களில் வெளிமாநிலங்களில் பயிரிடப்படும் வேளாண் பொருட்களின் வரத்து குறைவதால் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வேளாண் பொருட்கள் மற்றும் தானிய வகைகளை சேமித்து வைக்க கூடுதல் கிடங்கு வசதியை ஏற்படுத்த வேண்டும்.

அதே போல சுங்கச்சாவடி கட்டணம் என்பது விலையேற்றத்தில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் வந்து செல்லும் போது இரு முறை சுங்க கட்டணம் செலுத்தும் நிலை உள்ளதால் சராசரியாக ஒரு கிலோ தக்காளி விலை ரூ.10 முதல் ரூ.15 ரூபாய் வரை அதிகரிக்கிறது.

கட்டுப்படுத்த முடியும்

மத்திய, மாநில அரசுகள் இதனை தடுக்க கொரோனா காலங்களில் செயல்பட்டது போல சுங்க கட்டணங்களை ரத்து செய்தால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள், மற்றும் மளிகை பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

சாமானிய மக்கள் பாதிக்கப்படும் வகையில் பன்னாட்டு நிறுவனங்கள் பிஸ்கட், சலவைத்தூள், சோப் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிப்பதோடு, பொருட்களின் அளவை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பொன்.கு.சரவணன், நிர்வாகிகள் எஸ்.பாஸ்கரன், ஏ.வி.டி.பாலா, பரத்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்