சுங்கச்சாவடி ஊழியர்கள் கருப்புச்சட்டை அணிந்து போராட்டம்
சுங்கச்சாவடி ஊழியர்கள் கருப்புச்சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வந்த 28 பேர் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் கடந்த 1-ந் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தொழிலாளர் நலத்துறையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 24-வது நாளான தீபாவளி அன்று துக்க தீபாவளியாக உள்ளதென சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்து கருப்புச்சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு, கோஷங்களை எழுப்பினர். 25-வது நாளான நேற்று ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க தலைவர் விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.