கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை

கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Update: 2022-12-23 19:25 GMT

கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

கலைஞர் நூலகம்

மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.114 கோடி செலவில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., கலெக்டர் அனீஷ் சேகர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். மேயர் இந்திராணி, வெங்கடேசன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

மதுரை கலைஞர் நூலகம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் 6 மாடி கட்டிடத்துடன் கட்டப்பட்டு உள்ளது. பணிகள் ஏறக்குறைய முழுமையாக நிறைவு பெறும் வகையில் உள்ளன. அரசு எதிர்பார்த்ததை விட, இந்த பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் நூலகங்களில், வேலைக்கு செல்பவர்கள் விரைவாக செய்தித்தாள்களை வாசித்துவிட்டு செல்வதற்கு ஏதுவாக சிறப்பான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் கலைஞர் நூலகத்திலும் நாளிதழ்களை வேலைக்கு செல்பவர்கள் விரைவாக படித்து செல்வதற்கு ஏதுவாக போதுமான அளவில் மேஜைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

பொங்கல் தொகுப்பு

பொங்கல் விழாவை சிறப்பான முறையில் கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். இப்போது ஏன் கரும்பு கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள்?. கரும்பு வாங்கி கொடுத்தால் கால் கரும்பு கொடுத்தீர்கள், அரை கரும்பு தான் கொடுத்தீர்கள் என்று புகார்கள் வருகிறது. முந்திரி பருப்பு கொடுத்தால் சிறியதாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். வெல்லம் கொடுத்தால் ஒழுகுது என்று புகார்கள் வருகிறது.

பொங்கல் விழாவுக்கு சர்க்கரை பொங்கல். எனவேதான் சர்க்கரை மற்றும் பச்சரிசி வழங்கப்படுகிறது. மேலும் அதற்கு தேவையான ஏலக்காய், திராட்சை போன்றவற்றை வாங்குவதற்காகதான் ரூ.1000 ஆயிரம் வழங்குகிறோம். எனவே பொங்கலை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி திராவிட மாடல் அரசை பாராட்ட வேண்டும்.

கப்பலூர் சுங்கச்சாவடியில் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுகிறது. கப்பலூர் சுங்கச்சாவடி மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு சுங்கச்சாவடி மீது தமிழக அரசு அதிக கவனம் செல்லுத்துகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஏற்கனவே நான் மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். தமிழகத்தில் மொத்தம் 58 சுங்கச்சாவடி இருக்கிறது. இதில் காலம் முடிந்த பிறகு செயல்படும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் குறைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி, வருகிற 3 அல்லது 4-ந் தேதி டெல்லியில் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை வைக்க இருக்கிறேன். இதற்கு உரிய தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்