திருமங்கலம்-மதுரை இடையே இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களுக்கு ரூ.31 கோடி கட்டண பாக்கி என சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீசு

திருமங்கலம்-மதுரை இடையே இயக்கப்படும் அரசு பஸ்களுக்கு ரூ.31 கோடி கட்டண பாக்கி உள்ளதாக அரசு போக்குவரத்து கழகத்திற்கு, கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீசு அனுப்பி உள்ளது. இதையடுத்து பஸ்களை நேற்று சுங்கச்சாவடி ஊழியர்கள் நிறுத்தியதால் பயணிகள் வாக்குவாதம் செய்தனர்.

Update: 2022-07-15 21:10 GMT

திருமங்கலம்

திருமங்கலம்-மதுரை இடையே இயக்கப்படும் அரசு பஸ்களுக்கு ரூ.31 கோடி கட்டண பாக்கி உள்ளதாக அரசு போக்குவரத்து கழகத்திற்கு, கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீசு அனுப்பி உள்ளது. இதையடுத்து பஸ்களை நேற்று சுங்கச்சாவடி ஊழியர்கள் நிறுத்தியதால் பயணிகள் வாக்குவாதம் செய்தனர்.

கட்டண பாக்கி

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகனங்களுக்கு இதுவரையில் அளித்து வந்த சலுகையை ரத்து செய்தது. மேலும் திருமங்கலம், கப்பலூர் பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு பல லட்ச ரூபாய் சுங்கக்கட்டணம் பாக்கி இருப்பதாக வக்கீல்கள் மூலமாக நோட்டீசு அனுப்பப்பட்டது.

இதற்கு உள்ளூர் வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் மதுரை கோட்டத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்களுக்கு ரூ.29 கோடி கட்டண பாக்கி உள்ளதாக சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீசு அனுப்பி இருந்தது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமங்கலம்-மதுரை வழித்தடத்தில் தினசரி இயக்கப்படும் டவுன் பஸ்களுக்கு ரூ.31 கோடி பாக்கி உள்ளதாகவும், இதனை 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் மதுரை பழங்காநத்தம் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அதிர்ச்சி அடைந்தனர்.

வாக்குவாதம்

மேலும் நேற்று மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்த டவுன் பஸ்சில் இருந்த டிரைவர், கண்டக்டர்களிடம் சுங்கச்சாவடி கட்டணம் தொடர்பாக டிரைவர், கண்டக்டர்கள் கையெழுத்து போட்டுச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி பஸ்களை நிறுத்தினர். ஆனால் கையெழுத்து போட டிரைவர்கள் மறுத்தனர். இதனால் கப்பலூர் சுங்கச்சாவடி பகுதியில் டவுன் பஸ்கள் வரிசையாக நின்றன.

இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்கள் திருமங்கலம் அரசு பணிமனைக்கு தகவல் கொடுத்தனர். இந்தநிலையில் பஸ்களில் இருந்த பயணிகள் இறங்கி சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பஸ் செல்ல சுங்கச்சாவடி நிர்வாகம் அனுமதி அளித்தது. கப்பலூர் சுங்கச்சாவடியில் அடிக்கடி இதுபோல் அடிக்கடி பிரச்சினை நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்