ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லக்கண்ணு பெயர்: முதல்-அமைச்சர் உத்தரவு

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, நல்லக்கண்ணு பெயரை சூட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-12-26 07:31 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் முதுபெரும் பொதுவுடைமைச் சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர் இரா. நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

நமது மாநிலத்திற்கும், தமிழ் மக்களுக்கும் நல்லக்கண்ணு ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும்விதமாக, தமிழ்நாடு அரசு 2022-ம் ஆண்டு 'தகைசால் தமிழர்' விருது வழங்கிச் சிறப்பித்தது. இன்று அவரது நூறாவது பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தியபோது, அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர் பிறந்த ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தி, கூடுதல் வசதிகளுடன் புதிய மருத்துவமனைக் கட்டடம் அமைத்திட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியையே எப்போதும் தனது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னலமற்ற தகைசால் தமிழர் தோழர் இரா. நல்லக்கண்ணு அவர்களின் பெருமையைப் போற்றும்வகையில், ஸ்ரீவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டடத்திற்கு "தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்" எனப் பெயரிடவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்