மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க இன்று கடைசிநாள்

மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க இன்று கடைசிநாள் ஆகும். இணைக்காவிட்டால், மின்கட்டணம் செலுத்தமுடியாது.

Update: 2023-02-14 23:45 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்றுவருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் மின் பயனாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க அரசு உத்தரவிட்டிருந்தது.

இதற்காக, மின்கட்டணம் செலுத்தும் அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலை மின்சாரம் பயன்படுத்துவோர் 2 கோடியே 67 லட்சம் பேர் உள்ளனர்.

இவர்களில் நேற்று முன்தினம் வரை 2 கோடியே 65 லட்சம் பேர், மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்த்துவிட்டனர்.

2 லட்சம் பேர் இணைக்கவில்லை

சுமார் 2 லட்சம் பேர் இன்னும் இணைக்காத நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க அரசு வழங்கிய கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. ஏற்கனவே, 3 முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டதால், மேற்கொண்டு வழங்கப்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்கனவே கூறிவிட்டார்.

இன்றைக்குள் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்காவிட்டால், மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால், மின் இணைப்பு துண்டிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் வழியாக ஆதார் எண்ணை இணைத்தவர்கள் சிலருக்கு, ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்று குறுந்தகவல் சென்றுள்ளது. எனவே, உடனடியாக அவர்கள் மீண்டும் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும்.

இதேபோல், வீட்டு உரிமையாளர் அனுமதியின்றி வேறு ஒருவரின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததால், அதையும் சரி செய்யும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்