இன்று ஈஸ்டர் பண்டிகை: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

ஈஸ்டர் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-04-08 23:17 GMT

சென்னை,

கிறிஸ்தவர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

அதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-

தேவ குமாரனாம் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:- இயேசு பிரான் போதித்த அன்பை மாறாமல் பின்பற்றுகிற கிறிஸ்தவ சகோதரர்களை மனம் திறந்து பாராட்ட விரும்புகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- மனித குலத்தின் மனக்காயங்களுக்கு மருந்திடுவதோடு, அழுத்தும் துன்ப இருளில் இருந்து விடுவித்து நம்பிக்கை ஒளி ஏற்றும் உன்னத திருநாள் தான், உலகெங்கும் கிறிஸ்தவ மக்கள் போற்றி கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை நாளாகும். தமிழகத்தில் தரணியெங்கும் வாழும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை ம.தி.மு.க. சார்பில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- உலகில் அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்று போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3-வது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்துவ சொந்தங்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொல்.திருமாவளவன்

இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழ்நாடு நாடார் சங்கத்தலைவர் ஜெ.முத்து ரமேஷ் நாடார், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோரும் ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்