பஸ் படிக்கட்டில் பயணித்த மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி போலீசார்

மதுரையில் பஸ் படிக்கட்டில் பயணித்த மாணவர்களை கீேழ இறங்கி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2022-08-30 17:44 GMT

மதுரை

மதுரையில் பஸ் படிக்கட்டில் பயணித்த மாணவர்களை கீேழ இறங்கி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கண்காணிப்பு

மதுரை விளாங்குடியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் பிரபாகரன் நேற்று முன்தினம் பஸ் படிக்கட்டில் நின்று பயணித்த போது தவறி கீழே விழுந்து பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பஸ் படிகட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணிப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதை தொடர்ந்து மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகசாமி உத்தரவின் பேரில் கூடுதல் போக்குவரத்து துணை கமிஷனர் திருமலைக்குமார் தலைமையில் போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆகியோர் சாலைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அதன்படி புதூர் மூன்று மாவடி பகுதியில் அவர்கள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது பஸ் படிக்கட்டில் நின்றும், தொங்கியும் வந்த மாணவர்களை போலீசார் கீழே இறக்கி பல்வேறு அறிவுரை வழங்கினார்கள். மேலும் அவ்வாறு வந்த மாணவர்களின் விவரங்களை பெற்று பள்ளி மற்றும் அவரது பெற்றோர்களுக்கும் இனிபோன்று மாணவர் நடந்து கொள்ளக்கூடாது என்று தெரிவித்தனர். பின்னர் மாணவர்கள் இனி படிக்கட்டில் பயணம் செய்ய மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்தனர்.

விழிப்புணர்வு

மேலும் பஸ் டிரைவர்களிடம் இனி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் அவர்களை உடனே கீழே இறக்கி விட வேண்டும் என்றும், அவ்வாறு கீழே இறங்க மறுப்பவர்களை அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்ராம், தங்கமணி தலைமையிலும், காளவாசலில் கார்த்திக், நந்தகுமார், பாத்திமா கல்லூரி அருகே ரமேஷ்குமார், சுரேஷ் ஆகியோர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். இவ்வாறு ஒரே நேரத்தில் நகரில் பல்வேறு இடங்களில் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்