போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு 3 குழந்தைகளை அழைத்துக்கொண்டு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்: காதல் கணவர் மீது புகார்
தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு 3 குழந்தைகளை அழைத்து கொண்டு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் காதல் கணவர் மீது புகார் கொடுத்தார்.
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்த ராமன் மகள் திலகவதி. இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தனது 3 குழந்தைகளுடன் நேற்று வந்தார். அவர் கையில் வைத்து இருந்த பை மீது சந்தேகம் அடைந்த அங்கிருந்த போலீசார் அதை வாங்கி சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு கேனில் மண்எண்ணெய் இருந்தது. போலீசார் அந்த பையை வாங்கியதும் அந்த பெண் தரையில் அமர்ந்து தர்ணா செய்ய முயன்றார். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், "வடபுதுப்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை நான் காதலித்து திருமணம் செய்தேன். எனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தார். மேலும் அவர் சில பெண்களை ஆசை காட்டி ஏமாற்றியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். பின்னர் அவரை தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.