கிருதுமால் நதி பகுதியில் குவாரி அமைக்க அனுமதிக்க கூடாது

கிருதுமால் நதி பகுதியில் குவாரி அமைக்க அனுமதிக்க கூடாது என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2022-07-22 19:49 GMT

காரியாபட்டி,

கிருதுமால் நதி பகுதியில் குவாரி அமைக்க அனுமதிக்க கூடாது என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

ஆலோசனை கூட்டம்

நரிக்குடி அருகே உழுத்திமடை ஊராட்சி, உச்சனேந்தல் கிராமத்தில் சவுடு மண் குவாரி அமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து இருஞ்சிறை, உழுத்திமடை, கட்டனூர், வீரசோழன், மினாக்குளம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கிருதுமால் நதி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கிருதுமால் நதி நீர் பாசன விவசாய சங்க துணை செயலாளர் உறங்காபுலி தலைமை தாங்கினார். கிருதுமால், வைகை, குண்டாறு நதி பாசன சங்க பொது செயலாளர் அர்ச்சுணன், மாநில துணைத்தலைவர் மச்சேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கிருதுமால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 3 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

மண் குவாரி

கூட்டத்தில் உழுத்தி மடை ஊராட்சி, உச்சனேந்தல் கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சவுடு மண்குவாரியை மூட வேண்டும். கிருதுமால் நதி பகுதியில் எப்போதும் குவாரி அமைப்பதற்கு அரசு அனுமதி அளிக்ககூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் உச்சனேந்தல் கிராமத்தில் சவுடு மண் குவாரியை மூடக்கோரி ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகளை திரட்டி முற்றுகையிடுவது என விவசாய சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாநில செயலாளர் முருகன், விருதுநகர் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், இருஞ்சிறை ஊராட்சி மன்ற தலைவர் நாராயணசாமி, முன்னாள் கவுன்சிலர் மகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கட்டனூர் போலீசார் செய்திருந்தனர்.

இந்தநிலையில் திருச்சுழி பகுதியில் கிருதுமால் நதி படுகையில் மண்குவாரி அமைக்க அனுமதிக்க கூடாது என காவிரி, வைகை, கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அர்ச்சுணன் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்