போதைப்பொருள் விற்பனையை தடுக்கபொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்:போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-02-03 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்துங்கநல்லூர் அருகே கருங்குளத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட போலீஸ் துறை சார்பாக "மாற்றத்தை தேடி" மற்றும் "பள்ளிக்கு திரும்புவோம்" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணைசூப்பிரண்டு மாயவன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அன்னராஜ், பத்மநாபபிள்ளை, மணிவண்ணன், ராமகிருஷ்ணன், மேரி ஜெமிதா, லெட்சுமிபிரபா, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் ரமேஷ், ஸ்ரீவைகுண்டம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், ஆழ்வார்திருநகரி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மேல ஆழ்வார்த்தோப்பு கிராம உதயம் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது:-

ஆன்லைன் விளையாட்டுகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2ஆயிரத்து 643 இடங்களில் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு 76 ஆயிரத்து 427 மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்படும். இளம் வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திய குழந்தைகள் அல்லது இளைஞர்கள் குற்ற செயலில் ஈடுபடுவதால் அவர்களின் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுகிறது. இதை தடுப்பதற்கு இளம் வயதில் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு இருக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பள்ளி படிப்பை தொடர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இளைஞர்கள் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுக்கள், ஆன்லைனில் வரும் வேலை வாய்ப்பு போன்ற ஆன்லைன் செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

போதைப்பொருள்...

இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இதுகுறித்த தகவல் தெரிந்தால், உடனடியாக 83000 14567 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர் குறித்த விபரம் ரகசியமாக வைக்கப்படும். எனவே தூத்துக்குடியை போதைப்பொருள் இல்லாத, குற்றங்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும், என்றார்.

இந்நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர்கள், ஆழ்வார்த்தோப்பு கிராம உதயம் நிர்வாகிகள், ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்