தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் மண் சரிவை தடுக்க கோத்தகிரியில் 2 ஆயிரம் மண் மூட்டைகள் தயார்- அதிகாரிகள் தகவல்

தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் மண் சரிவை தடுக்க கோத்தகிரியில் 2 ஆயிரம் மண் மூட்டைகள் தயார்

Update: 2022-06-03 15:52 GMT

கோத்தகிரி

தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் மண் சரிவை தடுக்க கோத்தகிரியில் 2 ஆயிரம் மண் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மண் சரிவு, நிலச்சரிவு

தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது தென்மேற்கு பருவமழை. நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசமான பகுதியாக உள்ளதால் பருவமழை பெய்யும்போது மண் சரிவுகள், நிலச்சரிவு, வீடுகள், மரங்கள் சரிந்து விழுதல் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்பட்டு பொதுமக்களின் வீடுகள் மற்றும் உடமைகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

பருவமழையையொட்டி பேரிடர்களை சமாளிக்கும் வகையில், அனைத்துத் துறை அதிகாரிகளைக் கொண்ட முன்னணி களப்பணியாளர்களை உள்ளடக்கிய குழுக்கள் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

2 ஆயிரம் மண் மூட்டைகள் தயார்

இதுமட்டுமின்றி நெடுஞ்சாலை துறை, தீயணைப்புத் துறை வருவாய்த் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் பருவமழை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் உள்ளன. மேலும் தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறை சார்பில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து பேரிடர் மீட்பு செயல்விளக்க நிகழ்ச்சிகளும் கோத்தகிரி பகுதிகளில் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி நெடுஞ்சாலைத் துறை சார்பில் நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடை படாமல் இருக்கவும், குடியிருப்புகள் பாதிக்காமல் இருக்க தற்காலிக தடுப்புச் சுவர்கள் அமைக்கவும் வேண்டி 2 ஆயிரம் மண் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு அலுவலக வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

மீட்பு உபகரணங்கள்

இதுகுறித்து நெடுஞ்சாலை த் துறை உதவி கோட்டப் பொறியாளர் கணேசன், செயற்பொறியாளர் ரமேஷ் ஆகியோர் கூறியதாவது:- தென்மேற்கு பருவமழையை சமாளிக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தற்போது 2 ஆயிரம் மண் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளன.

மேலும் சாலைகளில் மரங்கள் சரிந்து விழுந்தால் உடனடியாக அகற்றும் வகையில் மின்வாள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள், மண்சரிவு ஏற்பட்டால் அதனை அப்புறப்படுத்த பொக்லைன் எந்திரம் உள்ளிட்டவை அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்