விளைபொருட்களை சந்தைப்படுத்த விவசாயிகளே தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும் மஞ்சள் கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு

மஞ்சள் கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு

Update: 2022-10-15 19:30 GMT

விளைபொருட்களை சந்தைப்படுத்த விவசாயிகளே தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும் என்று மஞ்சள் கருத்தரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசினார்.

மஞ்சள் கருத்தரங்கம்

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் பொன் மஞ்சள் கருத்தரங்கம் ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவுக்கு கருத்தரங்கின் தலைவர் டி.வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் உற்பத்தி அதிகமாக உள்ளது. விவசாயிகள் விளைபொருட்களை உற்பத்தி செய்வதோடு மட்டும் இருந்துவிடாமல் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளே தொழில் முனைவோர்களாக மாற வேண்டும். சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில், அரசு பல்வேறு திட்டங்கள், சலுகைகளை வழங்கி வருகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மஞ்சள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துவதன் மூலமாக உலகின் மஞ்சளுக்கு ஒரு அடையாளமாக ஈரோடு மாற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

5 விஞ்ஞானிகள்

கருத்தரங்கில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இயக்குனர் பி.பாலசுப்பிரமணியன் பேசும்போது கூறுகையில், "பவானிசாகரில் தொடங்கப்பட்டு உள்ள மஞ்சள் ஆராய்ச்சி மையத்தில் கடந்த 6 மாதங்களில் 275 மஞ்சள் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அங்கு தரமான மஞ்சள் உற்பத்தி குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கவும் விரைவில் 5 விஞ்ஞானிகள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த ஆராய்ச்சி மையத்துக்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கி உள்ளது", என்றார்.

மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி கூறுகையில், "கடந்த ஆண்டு தமிழகத்தில் 122 லட்சம் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.25 ஆயிரம் வரை விற்ற ஒரு குவிண்டால் மஞ்சள், தற்போது ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனையாகிறது. மேலும், மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த மஞ்சள் சாகுபடி தற்போது 15 ஆயிரம் முதல் 20 ஆயிரமாக குறைந்துவிட்டது. எனவே மஞ்சள் உற்பத்தியையும், சந்தைப்படுத்துவதையும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது", என்றார்.

இந்த கருத்தரங்கில் இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் எஸ்.சுரேஷ், சங்கர் வானவராயர், பி.பாலசுப்பிரமணியன், நாகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்தரங்கம் நிறைவுபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்