காபோன், செனகல், கத்தார் நாடுகளுக்கு துணை ஜனாதிபதி தலைமையில் தேனி எம்.பி. சுற்றுப்பயணம்
காபோன், செனகல், கத்தார் ஆகிய நாடுகளுக்கு துணை ஜனாதிபதி தலைமையில் தேனி எம்.பி. ரவீந்திரநாத் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்
தேனி, ஜூன்.4-
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தலைமையிலான குழுவினர் காபோன், செனகல், கத்தார் ஆகிய நாடுகளுக்கு 7 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 30-ந்தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த அதிகாரப்பூர்வ உயர்மட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவராக தேனி எம்.பி.யும், அ.தி.மு.க. மக்களவை குழு தலைவருமான ப.ரவீந்திரநாத் இடம் பெற்றுள்ளார். தமிழகத்தில் இருந்த குழுவில் இடம் பெற்றுள்ள ஒரே எம்.பி. ப.ரவீந்திரநாத் ஆவார். இந்த குழுவினர் காபோன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் மவுசாஅடாமோவுடன், கபோன் தேசிய சட்டமன்ற தலைவர் பாஸ்டின் பவுகவுபி, லிப்ரெவில்லி செனட்டின் தலைவர் லூசி மைல்போ ஆபுசன் ஆகியோருடன் சந்தித்து பேசினர். இதையடுத்து காபோன் அதிபர் மாளிகையில் காபோன் அதிபர் அலிபோங்கோ ஒண்டிம்ப், அந்நாட்டின் பிரதமர் ரோஸ் கிறிஸ்டியன் ஓசவுகா ரபோண்டா ஆகியோருடன் சந்தித்து பேச்சுவார்த்தை கூட்டங்களில் பங்கேற்றார். அதன்பிறகு, காபோனில் உள்ள லிப்ரெவில்லியில் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு சென்று வணிகர்களுடனான கலந்துரையாடலில் ப.ரவீந்திரநாத் எம்.பி. கலந்துகொண்டார். பின்னர், காபோனில் இருந்து புறப்பட்டு செனகல் நாட்டிக்கு இந்த குழுவினர் சென்றனர். அந்நாட்டின் தலைவர் டாக்காரில் அந்நாட்டின் அதிபர் மேக்கி சாலுடன் முக்கிய பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தினர். இதையடுத்து டாக்காரில் உள்ள ஆப்பிரிக்க மறுமலர்ச்சியின் நினைவுச் சின்னம், ஆப்பிரிக்க கலாசாரம், அறிவியல் பங்களிப்புகளை முன்னிலைப்படுத்தும் அருங்காட்சியகம், சர்வதேச கலைக் கண்காட்சி ஆகியவற்றை உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் சென்று ப.ரவீந்திரநாத் எம்.பி. பார்வையிட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.