நீட் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லைஎடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. கூட்டணியில் 38 எம்.பி.க்கள் இருந்தும் நீ்ட் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி பேசினார்.
அ.தி.மு.க.வுக்கு ஆதரவு
ஈரோடு எஸ்.பி.சி. கிறிஸ்தவ அமைப்பு பேராயர்கள் மற்றும் நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். அவர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-
அ.தி.மு.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு பாதுகாவலாக இருந்து வருகிறது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதால் கட்சியையும், ஆட்சியையும் சிறுபான்மையினர் ஏற்று கொண்டு உள்ளனர். கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைப்புக்காக அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.5 கோடி வழங்கப்பட்டது. ஜெருசலேம் பயணத்துக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. கிறிஸ்தவ மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தவறியதில்லை
கூட்டணி என்பது அவ்வப்போது தேர்தல் சூழலுக்கு ஏற்ப மாறுபடும். கொள்கை என்பதுதான் நிலையானது. எங்கள் கொள்கையை ஒரு போதும் சமரசம் செய்ய மாட்டோம். கூட்டணி வைத்துவிட்டால், மற்றொரு கட்சி சொல்வதை நாங்கள் கேட்போம் என எப்போதும் நினைக்க வேண்டாம். தமிழகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் அ.தி.மு.க. பாதுகாப்பாக இருக்கும். எந்த மதத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டாலும், முதல் குரல் ்கொடுக்க நாங்கள் தவறியதில்லை.
தமிழக மக்களின் நலனுக்காக மட்டுமே பாடுபடுவோம். ஆனால், தி.மு.க. அப்படியல்ல. காலத்துக்கும், கூட்டணிக்கும் ஏற்ப தங்கள் கொள்கை, கோட்பாடுகளை மாற்றி கொள்வார்கள். தங்கள் சொந்த நலனை மட்டுமே முன்னிலைப்படுத்துவார்கள்.
நீட் தேர்வு
காவிரி நதிநீர் பிரச்சினையில் மக்களுக்காக குரல் கொடுத்தோம். நாடாளுமன்றத்தில் 22 நாட்கள் குரல் கொடுத்து போராடினோம். நீட் தேர்வை தடுக்க முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா போராடினார். ஆனால் நாங்கள் நீட் தேர்வை கொண்டு வந்ததுபோல பேசி வருகிறார்கள். நீட் தேர்வு என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாடாளுமன்றத்தில் ஆழமாக எடுத்துரைத்தால் தீர்வு காணலாம். தி.மு.க. கூட்டணியில் 38 எம்.பி.க்கள் இருந்தும் எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் நல்ல மாற்றம் ஏற்படும். எனவே நல்ல மாற்றத்தை ஏற்படுத்த சிறுபான்மையின மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கே.வி.ராமலிங்கம், நத்தம் விஸ்வநாதன், கே.சி.கருப்பணன், தம்பிதுரை, மா.பா.பாண்டியராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு, பெரியார்நகர், கருங்கல்பாளையம், மரப்பாலம் உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி.முனுசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு வேட்டையாடினர்.