தோட்டக்கலை பயிர்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தோட்டக்கலை பயிர்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Update: 2022-11-04 18:45 GMT

வடகிழக்கு பருவமழையின் போது தோட்டக்கலை பயிர்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கண்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேர்கள் அழுவதை தவிர்க்கலாம்

காய்கறி பயிர்களான வெண்டை, கத்தரி, கொத்தவரை, மிளகாய் மற்றும் கொடிவகை காய்கள் ஆகியவற்றிற்கு முறையாக மண் அணைப்பது, வடிகால் வசதி ஏற்படுத்துவதன் மூலம் நீர் தேக்கத்தினால் வேர்கள் அழுகுவதை தவிர்க்கலாம். காய்கறி பயிர்களில் காய்ந்துபோன இலைகளை அகற்ற வேண்டும். இலைவழி உரமளித்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்தல் வேண்டும். குச்சி பந்தல் அமைத்து கொடிவகை காய்கறி பயிர் செய்வோர் மண் அணைத்தும், வலுவிழந்த பகுதிகளில் கூடுதல் ஊன்று கோல்கள் அமைத்தும் பந்தல் சாய்வதை தடுக்க வேண்டும்.

மா, கொய்யா, பலா மற்றும் முந்திரி போன்ற பல்லாண்டு பயிர்களில் காற்று மரங்களின் இடையே புகுந்து செல்லும் வகையில் காய்ந்த, பட்டுப்போன, தேவையற்ற பக்க கிளைகள் மற்றும் அதிகபடியான இலைகளை கவாத்து செய்வதன் மூலம் மரத்தின் சுமையை குறைத்து காற்றிலிருந்து பாதுகாக்கலாம். கவாத்தின் போது வெட்டப்பட்ட பகுதியில் காப்பர் ஆக்சிகுளோரைடு 300 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து பூசுவதன் மூலம் பூச்சி மற்றும் நோய் தாக்குவதைத் தவிர்க்கலாம்.

வடிகால் வசதி

அடி மரத்தை சுற்றி மண் அணைக்க வேண்டும். 1 முதல் 3 வயதுள்ள கன்றுகள் மற்றும் ஒட்டுச்செடிகளை முட்டுக்கொடுப்பதற்கு குச்சிகளை பயன்படுத்துவது சிறந்தது. மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத் தோப்பினைச் சுற்றி வாய்க்கால் எடுத்து மழைநீர் தேங்காமல் வெளியேற வடிகால் செய்ய வேண்டும். இதர தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்படும் அனைத்து தோட்டங்களிலும் அதிக மழைநீர் தேங்காவண்ணம் உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

தேவையான தொழு உரம்

காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் கயிறு, மரங்கள் மூலம் முட்டுக்கொடுத்து காற்றின் வேகத்திலிருந்து புதிதாக நடவு செய்த செடிகள் மற்றும் மரத்தினை சாயாவண்ணம் பாதுகாத்தல் வேண்டும். கனமழை அல்லது காற்றுக்குப்பின் மரங்களில் பாதிப்பு இருப்பின், மரத்தை சுற்றி மண் அணைத்து, மரங்களுக்கு தேவையான தொழுஉரம் இடவேண்டும். பூஞ்சாணக்கொல்லிகள் மற்றும் உயிரி நோய்க்கட்டுப்பாட்டுக் காரணிகளை இட்டு நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்