கவர்னர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் - சைலேந்திரபாபுவை நியமிக்க மீண்டும் பரிந்துரை
டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திரபாபுவை தேர்வு செய்து பரிந்துரைத்த விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி சில விளக்கங்களை கேட்டு, அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு தமிழக அரசு விளக்கங்களுடன், சைலேந்திரபாபுவை தலைவராக நியமிக்க மீண்டும் பரிந்துரைத்து கடிதம் அனுப்பியுள்ளது.;
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் 9-ந்தேதி ஓய்வு பெற்றார். அவருக்கு பிறகு, டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக இருக்கும் முனியநாதன் பொறுப்பு தலைவராக தற்போது வரை இருந்து வருகிறார்.
கடந்த ஓராண்டுக்கு மேலாக தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாததால், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள், தேர்வு முடிவுகள் போன்றவற்றை அறிவிப்பது, வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதனை சரிசெய்ய டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவியை நிரப்ப வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை தேர்வு செய்து, பரிந்துரை கடிதத்தை கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலை பெறுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுப்பி வைத்தது.
இந்த நிலையில், சமீபத்தில் கவர்னர் மாளிகையில் இருந்து டி.என்.பி.எஸ்.சி. தலைவரை தேர்வு செய்த விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டதா?, தலைவர் தேர்வு எந்த முறையில் நடத்தப்பட்டது?, அதேபோல் உறுப்பினர்கள் தேர்வில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன? என்பது போன்ற பல்வேறு விளக்கங்களை கேட்டு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
முன்னதாக அரசு அனுப்பி இருந்த கோப்பை கவர்னர் மாளிகை திருப்பி அனுப்பியதாக சொல்லப்பட்டது. ஆனால் கோப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த தகவல்களுக்கு முறையான விளக்கங்கள் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.
கவர்னர் மாளிகை தரப்பில் அனுப்பப்பட்ட அந்த கடிதத்துக்கு விரைவில் தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கக் கடிதம் அனுப்பி வைக்கப்படும் என்று அப்போது சொல்லப்பட்ட நிலையில், அதன்படி தற்போது கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டிருந்த கேள்விகளுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் முறையான விளக்கக் கடிதம் அளிக்கப்பட்டு இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த கடிதத்தில், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தேர்வு எதனை பின்பற்றி நடத்தப்பட்டது?, சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல் எப்படி பின்பற்றப்பட்டு இருக்கிறது? தலைவர் பதவிக்கு யார்? யாரெல்லாம்? விண்ணப்பித்தார்கள்? என்பது உள்பட பல்வேறு தகவல்களை விளக்கத்துடன் அரசு தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், அரசு அனுப்பி இருக்கும் அந்த கடிதத்தில், ஏற்கனவே சைலேந்திரபாபுவை டி.என்.பி.எஸ்.சி. தலைவராக தேர்வு செய்து பரிந்துரைத்ததை மீண்டும் சுட்டிக்காட்டி அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சைலேந்திரபாபுவோடு சேர்த்து, 8 உறுப்பினர்கள் பெயரையும் அதில் பரிந்துரைத்து அரசு கோப்புகளை அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.