போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக திருவாரூரை மாற்ற வேண்டும்

போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக திருவாரூரை மாற்ற வேண்டும்

Update: 2023-06-26 18:45 GMT

போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக திருவாரூரை மாற்ற வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாரூர் திரு.வி.க. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராஜாராமன் வரவேற்றார். முன்னதாக மாணவா்கள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த உறுதி மொழி எடுத்துகொண்டனர். தொடர்ந்து போதைப் பொருட்களுக்கு எதிராக குறும்படம் ஒளிபரப்பபட்டது.

பின்னர் போலீஸ்சூப்பிரண்டு சுரேஷ்குமார் பேசுகையில், மாணவர்களாகிய நீங்கள் படிப்பை விட முதலில் 100 சதவீத சுய ஒழுக்கத்தை கற்று கொள்ளவேண்டும். திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போதைக்கு அடிமையானவர்கள் முதலில் தங்களுக்கு தெரியாமலேயே அடிமையாகின்றனர்.

பொறுப்புகள் அதிகரிக்கும்

ஆசிரியர்கள் அறிவுரை கூறும் போது கேட்க கஷ்டமாக தான் இருக்கும். அதனை பொருத்து ஏற்று கொண்டால் வெற்றி பெறலாம். அதனை திசை திருப்பினால் நிச்சயம் தவறான பாதையில் அழைத்து செல்லும். கல்லூரி படிக்கும் உங்களுக்கு இனிவரும் காலங்களில் தான் பொறுப்புகள் அதிகரிக்கும்.

மாணவர்களின் பொறுப்புகளுக்கு இடையூறாக இருப்பது போதை பொருட்கள் தான். போதை பொருள் என்பது பல்வேறு வடிவங்களில் உள்ளது. ஒவ்வொரு பள்ளி கல்லூரிகளில் போதை பொருட்களுக்கு அடிமையானவர்களை மீட்க குழு அமைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்க திருவாரூர் மாவட்ட போலீசார் சார்பில் உதவி கிடைக்கும்.

86 வழக்குகள் பதிவு

இந்த ஆண்டில் மட்டும் கஞ்சா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 107 விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 835 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். மாணவர்களாகிய நீங்கள் திருவாரூர் மாவட்டத்தை போதை பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், வெள்ளத்துரை, நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் உள்பட போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்