திருவாரூர் மாவட்டத்தில் ஏரி, குளங்களில் போதிய தண்ணீர் உள்ளது
திருவாரூர் மாவட்டத்தில் ஏரி, குளங்களில் போதிய தண்ணீர் உள்ளது
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 44 சதவீதம் குறைந்துள்ளது. ஆனாலும் ஏரி, குளங்களில் போதிய அளவு தண்ணீர் உள்ளது.
44 சதவீதம் மழை குறைவு
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வானிலை ஆய்வு மைய நடைமுறைப்படி அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை காலமாக கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. திருவாரூர் மாவட்டத்தில் சராசரியாக வடகிழக்கு பருவமழை பெய்ய வேண்டிய அளவின்படி (மி.மீட்டர்) அக்டோபர் மாதம் 205.7, நவம்பர் மாதம் 350.5, டிசம்பர் மாதம் 175.3 என மொத்தம் 731.5 மி.மீட்டர் ஆகும். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 105.6, நவம்பர் மாதம் 199.58, டிசம்பர் மாதம் 177.96 என மொத்தம் 483.44 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதன்படி சராசரியாக பெய்ய வேண்டிய மழை 44 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு 1287.98 மி.மீட்டர் என்ற வகையில் 176 சதவீதம் மழை அளவு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வறட்சி ஏற்பட வாய்ப்பு குறைவு
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சற்று குறைந்த போதிலும், மேட்டூர் அணை முன்னதாக திறக்கப்பட்டு, தூர்வாரப்பட்டதாலும் தற்போது வரை அனைத்து ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் போதிய அளவு செல்கிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகள், 4 நகராட்சி, 7 பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்த்தும் 4875 குளங்கள், 30 ஏரிகள் ஆகியவற்றில் போதிய அளவு தண்ணீர் இருந்து வருகிறது. இதனால் கோடை காலத்தில் வறட்சி ஏற்பட வாய்ப்பு குறைவாக உள்ளது.