நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்

நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-12-28 20:59 GMT

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் கொடி பட்டமானது பல்லக்கில் வைத்து கோவில் உட்பிரகாரத்தில் வீதிஉலா வருதலும், சுவாமி சன்னதி மண்டபத்தில் அமைந்துள்ள கொடிமரம் அருகே வைத்து சிறப்பு பூஜைகளும் நடந்தன.

அதை தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.

விழாவின் 4-ம் நாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் வீதிஉலா வருதல், வருகிற 5-ந் தேதி கோவிலின் 2-ம் பிரகாரத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தாமிரசபையில் நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. 6-ந் தேதி அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை நடராஜர் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்