திருப்பூர்: 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது

திருப்பூரில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-11-08 16:59 GMT

திருப்பூர்,

திருப்பூரை எடுத்த திருமுருகன்பூண்டியில் தனியாருக்கு சொந்தமான ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தில் 15 சிறுவர்கள் தங்கியிருந்தனர்.

இந்த சூழலில் சம்பவம் நடந்த தினம் அன்று காலை சிற்றுண்டி சாப்பிட்ட சிறுவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிறுவர்கள் அனைவரும் அவிநாசி, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், மாதேஷ்(16), பாபு (13), ஆதிஷ்(8) ஆகிய 3 சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சமூக நல பாதுகாப்புத்துறை இயக்குநர் வளர்மதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த குழு விசாரணை மேற்கொண்டு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனிடையே தனியார் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதா பிரியாவை பணியிடை நீக்கம் செய்து சமூக நலத்துறை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் காப்பக அறங்காவலர் செந்தில் நாதன், வார்டன் கோபி கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜாக்கிரதையாக செயல்பட்டது, உயிரிழப்பை ஏற்படுத்தியது, இளம் சிறார் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்