கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் திருக்கல்யாணம்
கந்தசஷ்டி விழாவை யொட்டி முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கந்தசஷ்டி விழா
கூடலூர் கூடல் சுந்தரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. 6 நாட்கள் நடைபெற்ற விழாவின் கடைசி நாளான நேற்று காலை 9.45 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் வள்ளி, தேவசேனாவுடன் கூடல் சுந்தரவேலவருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி கல்யாண சீர்கள் தாலி மஞ்சள் கயிறு, மணமாலை, பழ வகைகள், வெற்றிலை பாக்கு மற்றும் மெட்டிகள் கொண்டு வரப்பட்டன.
பின்னர் வண்ண மலர்களால் வள்ளி, தேவசேனா, சுந்தர வேலவர்களை அலங்காரம் செய்தனர். மேலும் புரோகிதர்கள் வள்ளி, தேவசேனாவிற்கு சுந்தரவேலவர் சார்பில் திருமாங்கல்யத்தை அணிவித்தனர். அப்போது பக்தர்கள் அரோகரா, அரோகரா கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் மயில் வாகனத்தில் வள்ளி, தேவசேனாவுடன் சுந்தரவேலவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருக்கல்யாணம்
இதையடுத்து ஊஞ்சல் உற்சவத்துடன் நிகழ்ச்சி முடிவடைந்தது. திருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கூடல் சுந்தரவேலவர் கோவில் விழாக்குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கம்பத்தில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, கம்பராயப்பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ சண்முக சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று காலை முருகப்பெருமான், வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றன.
சாமி தரிசனம்
பின்னர் மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க காலை 10 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு மஞ்சள், மஞ்சள் கயிறு, குங்குமம் அடங்கிய மாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டன. கம்பராயப் பெருமாள் கோவில், வேலப்பர் கோவில், மாரியம்மன் கோவில்களில் அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், சண்முக சுப்பிரமணியசாமி கோவில், வேலப்பர் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், கம்பம் கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பாலமுருகன் கோயில், ஆதிசக்தி விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில்களில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
போடி சுப்பிரமணிய சுவாமி
போடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முருகன், வள்ளி தெய்வானையுடன் அருள்பாலித்தார். பின்னர் வள்ளி, தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அப்போது முருகா, குமரா, வெற்றிவேலா என்று பக்தர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
பின்பு மூலஸ்தானத்தில் உள்ள முருகனுக்கு தங்க கவசம் அணிவித்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாங்கல்யம் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயை பக்தர் ஒருவர் ரூ.66 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.