திருச்செந்தூர்வெயிலுகந்தம்மன் கோவில் ஆவணித் திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் ஆவணித் திருவிழா தேரோட்டம் நடந்தது.

Update: 2023-09-01 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

ஆவணித்திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணித்திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

பத்தாம் திருநாளான நேற்று காலை 6 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரைவடம் படித்து இழுத்து சென்றனர். தேர் வெளிவீதிகள் வழியாக பவனி வந்து நிலையை சென்றடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர்.

இதில், கோவில் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், பணியாளர்கள் ராஜ்மோகன், ஆவுடையப்பன், செல்லகுத்தாலம், பால்ராஜ், மாரிமுத்து, மணியம் நெல்லையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சண்முகருக்கு எதிர்சேவை

இரவு அம்மன் அலங்கார சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளி சண்முகருக்கு எதிர்சேவை காட்சியளித்து, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து கோவிலை சேர்ந்தார்.

திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்