பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்றக்குடி கோவிலில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தரிசனம் செய்தனர்.

Update: 2023-04-14 18:45 GMT

திருப்பத்தூர்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்றக்குடி கோவிலில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தரிசனம் செய்தனர்.

தமிழ் புத்தாண்டு

திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று இங்குள்ள திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதையடுத்து நேற்று தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூர்வாங்க பூஜை நடைபெற்று தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மூலவர் கற்பகவிநாயகர் தங்க கவசத்திலும், மூலவர் வெளிப்பிரகாரம் அருகே உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து காலை 10 மணிக்கு கோவில் திருக்குளத்தில் அஸ்திர தேவர் மற்றும் அங்குச தேவருக்கு தலைமை சிவாச்சாரியார் பிச்சைக்குருக்கள் தலைமையில் பால், தயிர், மஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொடிகளால் அபிஷேகம் நடைபெற்றது.

பஞ்சாங்கம் வாசிப்பு

பின்னர் ஸ்ரீதர் குருக்கள் திருக்குளத்தில் இறங்கி அங்குச தேவருக்கும், அஸ்திர தேவருக்கும் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சியை நடத்தினார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு மூலவர் சன்னதி முன்பு புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் காலை முதல் இரவு வரை குடிதண்ணீர், உணவு, சுகாதார வசதிகள் ஆகியவை செய்து கொடுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி எஸ்.தண்ணீர்மலை செட்டியார், காரைக்குடி சா.க.சுவாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.

பால்குடம் ஊர்வலம்

இதேபோல் காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் மடத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் பால்குடம் எடுத்து கோவில் வீதியை சுற்றி வந்து சண்முகநாதபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தேவகோட்டை ரெங்கநாதபெருமாள் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மடப்புரம்

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் தென் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதலே மடப்புரம் கோவிலுக்கு பக்தர்கள் வரத்தொடங்கினர். முன்னதாக அம்மனுக்கு வெள்ளி கிரீடம், வெள்ளி பாதங்கள், வெள்ளி காதணிகள் அணிவிக்கப்பட்டிருந்தது. மதியம் 1 மணி அளவில் நடைபெற்ற உச்சிக்கால பூஜையின் போது அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சில பெண் பக்தர்கள் அருள் வந்து சாமியாடினார்கள்.

இதில், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமாநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காலை முதல் மாலை வரை திரளான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்